உழவா...? அழிவா..?
இன்றைய விவசாயிகள் நிலை
----------------------------------
விவசாயம்-
வேரோடு சாயுது!
விவசாயி-
கண்கள் எல்லாம்
ஆறாகப் பாயுது!
ஏரும் இல்லை
எருதும் இல்லை;
ஏரோட்ட-
எவரும் இல்லை!
நீரோட்டப் பூமியிலே
பயிரிட்டுப்-
பயனும் இல்லை!
காசு, பண ஆசையாலே
பலர்-
காரோட்டச்
சென்றுவிட்டார்!
நெல் நட்ட
நிலத்தை எல்லாம்
கல் நட்டி
விற்றுவிட்டார்!
'கான் கிரீட்'
கலவை ஊற்றி
அதில்-
கட்டிடங்கள்
வளர்த்து விட்டார்!
ஆறுகளை
அள்ளுகிறார்;
மலைகளைக்
கிள்ளுகிறார்!
இயற்கை வளங்களை
கொள்ளையிட்டு
செல்லுகிறார்!
ஏரி, குளங்களை
இல்லாமலே
செய்கிறார்!
ஆறு, நதிகளை
இணைப்பதாகச்
சொல்லுகிறார்!
வெறும் வாயினாலே
அவலினை
மெல்லுகிறார்!
அண்டை நாட்டார்
சண்டையிட்டு
தண்ணீர்தர
மறுக்கிறார்!
தமிழ் நாட்டார்
கவலையற்று
'தண்ணீரில்'
மிதக்கிறார்!
வேலைக்கே-
போக வேண்டாம்
விலையில்லா
அரிசி உண்டு!
சோம்பேறி ஆகிட்டார்!
வேலைக்கே போனாலும்
வேலையே-
செய்ய வேண்டாம்!
விழலுக்கு இறைத்துவிட்டார்!
நூறுநாள் திட்டம்;
அத்தனையும் நட்டம்!
பெருகாத குளங்களை
தூர் வாருகின்றார்!
உடல் நோகாமலே
நிழலில்-
இளைப்பாறு கின்றார்!
விவசாய வேலைக்கு
ஆள் கிடைப்பதில்லை!
விளைந்தாலும் உழவர்க்கு
விலை கிடைப்பதில்லை!
"ஊருக்கு உழைத்துழைத்து
எதைத்தான் கண்டோம்?
உடுத்தவோர் உடையின்றி
தெருவிலே நின்றோம்!
விவசாய குடும்பத்தில்
ஏன்தான் பிறந்தோம்?
வேதனைகள் மட்டுமே
முதுகில் சுமந்தோம்!"
கடன்-
சோதனைகள்
துரத்துவதால்
புலம்புகின்றார்!
தாலி, நூலை
விற்கின்றார்!
தன்மானம்-
விற்க அஞ்சி
தற்கொலையும்
செய்கின்றார்!
விவசாயம்
முதுகெலும்பு;
விவசாயி
விலா எலும்பு!
வாய்கிழிய பேசுதற்கு
வேண்டாமா ஓர்வரம்பு?
தமிழகமே-
விழித் தெழும்பு!
தாய்-
மண் வளத்தை
மீட்க கிளம்பு!
கம்ப்யூட்டர்
கவர்ச்சி போலே
விவசாய
புரட்சி வேண்டும்!
இயற்கையோடு
இசைவாக
புதுமைகளை
புகுத்த வேண்டும்!
இளைஞர்களை
ஈர்க்கும்படி
புது-
வேளாண்மை
இருக்க வேண்டும்!
உழுபவன்
ஏர்ப்பின்னே
முழு-
அரசாங்கமும்
நிற்க வேண்டும்!
இல்லை என்றால்...
இயற்கைக்கு மாறாக
இறக்குமதி செய்கின்ற
வெளிநாட்டு 'விஷ மண்ணை'
வெட்கம்கெட்டு தின்றுவிட்டு
தவணை முறையிலே
நம்-
தலை முறைகள்
சாக வேண்டும்!
எது வேண்டும்?
No comments:
Post a Comment